முன்னுரை
” பம்ப் துறையில் தனக்கென ஓர் இடம் பிடித்து, சாதனை புரிந்த திரு எஸ் பி கோகுல் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்குகிறோம் “
பலத்த கைதட்டலுக்கு இடையே எனக்கு வழங்கப்பட்ட விருது நிறைவளித்தது என்றாலும், அந்த விருது இல்லாமலேயே கூட நான் நிறைவாகத்தான் இருந்தேன். இந்த நிறைவுக்கு காரணம் பம்ப் துறையில் எனக்கு ஆசானாக அமைந்தவர்தான்.
பம்ப் கம்பெனியின் வேலையை நான் விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை. எப்படியோ தற்செயலாக அதில் சேர்ந்து பணியாற்றி வந்தேன். சில் மகிழ்ச்சிகள், சில வருத்தங்கள் இருந்தாலும் ஒரு வெறுமை எப்போதுமே இருந்த்து. பம்ப்புகள் சூழ்ந்த உலகில் பம்ப் குறித்து எதுவும் தெரியாமல் வாழ்கிறோமே என்ற வருத்தம் ஏற்பட்த்தொடங்கியது.
எதுவுமே தெரியாமலும், தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் இருப்பவர்களில் ஒருவனாக இருக்க நான் விரும்பவில்லை. தொழிற்சாலைஒயில் என்னை சுற்றிலும் பம்புகள் இயங்கி கொண்டு இருக்கும்போது, அவற்றின் சத்தம் அவற்றின் இதய துடிப்பு போல இருக்கும். அவை எல்லாம் உயிர் துடிப்புள்ள உணர்வுகள் கொண்ட உயிரிகளாகவும் , நான் மட்டும் பிணமாகவும் இருப்பது போலவும் தோன்றும்.
இந்த நிலையில்தான், தேவையான இன்ஃபர்மேஷன்கள் தரும் இன்ஃபார்மர் விஷ்ணுவைப்பற்றி கேள்விப் பட்டேன். பம்ப் துறையில் பல சாதனைகள் செய்தவன் என கேள்விப்பட்டேன். பல சாதனையாளர்களை அவன் உருவாக்கி இருப்பதை அறிந்தேன். ஆனால் அவன் சொல்லித்தருவதெல்லாம் தவறானவை என சிலர் சொன்னார்கள். விஷ்ணு என ஒருவன் இல்லையென கூட சிலர் சொன்னார்கள். சரி..சரியானதை நீங்கள் சொல்லுங்கள் என கேட்டால் அவர்களுக்கு சொல்ல தெரியவில்லை.
எனவே வேறு வழியின்றி விஷ்ணுவை நம்பினேன். வெகு நாட்கள் காக்க வைத்த பின், விஷ்ணுவிடம் இருந்து மெயில் வந்த்து.
” டியர் மிஸ்டர் கோகுல். உங்களை காக்க வைத்த்தற்கு சாரி. நல்ல விஷ்யங்கள் காத்திருந்தால்தானே கிடைக்கும் ?! உண்மையில் எனக்கும் பம்ப் பற்றி முழுமையாக தெரியாது. எனக்கு என் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த்தைத்தான் அப்படியே பின் பற்றி வருகிறேன். அவர் நட்த்திய பாடங்கள் உங்கள் அறையில் இருக்கும் கம்ப்யூட்டரில் உள்ளன. நாளை அதற்கான பாஸ்வோர்ட் அனுப்புகிறேன். படித்து பயன் பெற வாழ்த்துகிறேன் – விஷ்ணு “
படித்த்தும் பெரும் மகிழ்ச்சி உண்டானது. நாளை பாஸ்வேர்ட் வந்து விடும். நானும் பம்ப் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறேன்.
அடுத்த நாள் சொன்னபடியே மெயில் வந்து விட்ட்து.
“ mr. கோகுல். - S W H2 6F இதுதான் குறியீடு . கவனம் – விஷ்ணு “
உற்சாகமாக பாடங்களை ஆரம்பித்தேன்.
பம்ப்பை அதன் இயங்கும் முறை அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கலாம். 1. ரோடோடைனமிக் பம்ப் 2. பாசிடிவ் டிஸ்ப்ளேஸ்மெண்ட் பம்ப் . இந்த இரு வகைக்குள்தான் அனைத்து பம்புகளும் அடங்கும்.
என்று ஆரம்பித்து பம்ப் குறித்த பல பாடங்கள் இருந்தன.
அதற்கு பின் உற்சாகமாக பணியாற்றினேன். ஆனாலும் ஏதோ ஒன்று குறைந்த்து.
விஷ்ணு முழுமையாக சொல்லித்தரவில்லை என தோன்றியது. வேண்டுமென்றே சொல்லித்தரவில்லையா அல்லது அவனுக்கு தெரியவில்லையா?
அவனுக்கே இவ்வளவு தெரிந்து இருந்தால், அவன் ஆசிரியருக்கு எவ்வ்ளவு தெரிந்து இருக்கும்!! அவரை பார்க்க முடியுமா?
அவரை யாரும் பார்த்த்தே இல்லை என்றார்கள்.. அவரை பார்த்தவர்கள் சிலர் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் அவரைப்பற்றி பேசுவதில்லை.. அவரைப்பற்றி பேசுபவர்கள் அவரைப் பார்த்த்தில்லை என்றார்கள் சிலர்.
இனி யாரிடமும் கேட்டு பயனில்லை. மீண்டும் விஷ்ணுவையே சந்திக்க முடிவு செய்து அவன் வீட்டை தேடி அலைந்தேன்.
கடைசியாக அவன் வீட்டை அடைந்த போது அங்கு அவன் இல்லை. போன் செய்தேன்.
“ கோகுல் . வெயிட் பண்ணுங்க .. கொஞ்ச நேரத்துல வந்துட்றேன். வீட்டு சாவி பக்கத்து வூட்ல வாக்கிங்கோங்க “ என்றான் அவன்.
போர் அடித்த்து. அவன் கம்ப்யூட்டர் ஆனில் இருந்த்து. மெயிலையும் க்ளோஸ் செய்யாமல் விட்டு இருந்தான்.
என்னைப்பற்றி என்ன மெயில் அனுப்பி இருக்கிறான்?
சர்ச் ஆப்ஷனில் கோகுல் என டைப் செய்து தேடினேன்.
இரண்டுதான் தேறின. ஆனால் மானிட்டரில் சரியாக படிக்க முடியவில்லை.
இரண்டையும் ப்ரிண்ட் போட்டேன். தனி தனியாக கட் செய்து பார்த்தேன்.
mr. கோகுல். - S W H2 6F இதுதான் குறியீடு . கவனம் – விஷ்ணு
சார், எஸ் பி கோகுலுக்கு தவறான குறியீட்டைத்தான் கொடுத்து இருக்கிறேன். கவலை வேண்டாம் “
படித்த நான் திகைத்தேன். எனக்கு ஏன் தவறான தகவல் கொடுக்க வேண்டும்? துரோகி.
மனம் வெதும்பிய போது போன் அடித்த்து.
அவன் தான்..
” ராஸ்கல். என்னை ஏன் ஏமாற்றினாய்? இனி உன்னை நம்ப போவதில்லை. உன் ஆசிரியரை அறிமுகப்படுத்து. அவரிடமே தெரிந்து கொள்கிறேன் “
அவன் அமைதியாக சொன்னான்.
“ அவரே உன்னை தேடி வந்து கொண்டு இருக்கிறார். அங்கேயே இரு “
அட. அவரே வருகிறாரா? என்னால் நம்பவே முடியவில்லை.
சற்று நேரத்தில் கதவு திறக்கப்பட்ட்து. பளீரென உள்ளே நுழைந்த சூரிய ஒளியில் கண்கள் கூசின. அவரை சரியாக பார்க்க முடியவில்லை. அவர் கதவை அடைத்த பின்புதான் தெளிவாக பார்க்க முடிந்த்து. பம்ப் நிபுணர் என்றதும் கோட் எல்லாம் அணிந்து இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவரோ வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமாக இருந்தார்.
சற்று கூர்ந்து கவனித்தேன். அட. என் கூட வேலை செய்யும் ஹெட் மெக்கானிக் போல இருக்கிறாரே.. அவரேதான் இவர். இவர்தான் ஆசிரியரா. தெரியாமல் போய் விட்ட்தே, இவரை தேடி எத்தனை நாள் அலைந்தேன். கடைசியில் பக்கத்திலேயே இருந்து இருக்கிறார்.
என் முன் இருக்கையில் அமர்ந்தார். “ நீ கற்பதற்கு தயாராக இருக்கிறாய் என தெரிகிறது. பம்ப் பாட்த்தை ஆரம்பிக்க்லாமா? “
நான் தலையசைத்து ஆமோதித்தேன்.
( முன்னுரை முடிவுற்றது )
பம்ப் குறித்த சில பகிர்தல்கள்
” ஆசிரியர்கள் எங்கும் இருக்கிறார்கள்.. நாம் கவனிப்பதில்லை. உனக்கு உண்மையிலேயே பம்ப் குறித்து கற்கும் ஆவல் வரும்போதுதான் அந்த ஆசிரியர் உன் கண்ணுக்கு தெரிவார். பக்குவம் அடைவதற்கு முன்பே உனக்கு சொல்லித்தர ஆரம்பித்தால் அந்த பாடம் மேல் உனக்கு மரியாதை இருக்காது. மாறாக வெறுப்பு ஏற்படும். எனவேதான் உனக்கு தவறான பாஸ்வேர்ட் தரப்பட்ட்து. முழு பாடங்களின் பாஸ்வேர்ட் கொடுத்து இருந்தால் உனக்கும் பயனில்லை. எனக்கும் மரியாதை போய் விடும்.”
“ பம்ப் ஆசிரியனை எப்படித்தான் கண்டு பிடிப்பது? “ எரிச்சலுடன் கேட்டேன்
”பள்ளமான இட்த்தை நோக்கி நீர் தானாகவே ஓடி வந்து விடும். ஒருவன் கற்கும் ஆவலுடன் , பணிவுடன் இருந்தால் ஆசிரியர் அவனை தேடி ஓடி வந்து விடுவார். நீ ஒன்றும் கண்டு பிடிக்க தேவையில்லை. நீயாகவே கண்டு பிடிக்க முயன்றால் தவறான ஆசிரியரிடம்தான் சிக்குவாய்.
பம்ப் பற்றி தெரியாதவன் , பம்ப் பற்றி தெரிந்தவனை மன்னிப்பதே இல்லை. கிண்டல் செய்வது, இழிவு படுத்துவது என செய்து தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள பார்ப்பான். உலகம் முழுதும் பம்ப் துறையில் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறது. ”
அவர் சொல்வது உண்மைதான் என்பதற்கு நானே உதாரணமாக இருந்திருக்கிறேன் என்பதால் அமைதியாக கேட்டுகொண்டு இருந்தேன்.
”பம்ப் துறையில் நிபுணன் ஆக வேண்டுமென்றால் மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்
· பம்ப் குறித்து தெரியாது என்ற பிரஞ்ஞை உருவாக வேண்டும்
· பம்ப் குறித்து தீவிரமாக கற்க வேண்டும்
· கற்றதை மறக்க வேண்டும் “
திகைத்தேன்
“ மறக்க வேண்டுமா? “
என் திகைப்பை கண்டு கொள்ளாமல் அவர் தொடர்ந்தார்.
“ நடக்கிறோம் என்ற பிரஞ்ஞையுடன் , ஓர் ஆயிரம் கால் பூச்சி நடந்தால், இரண்டி அடி கூட நடக்க முடியாது.. மூச்சு விடுவது போல இயல்பாக நடக்க வேண்டும். எவ்வளவு கற்கிறோமோ அந்த அளவுக்கு அது இயல்பாகி விடும் . நம்மை மறந்து செயலில் ஈடுபடுவோம் இதுவே முழுமையான நிலை.
” சரி. பம்ப்பின் ஆரம்ப பாடங்கள் படித்து இருப்பாய். பம்பின் முக்கியமான அங்கம் எது?“
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் உற்சாகத்துடன் சொன்னேன்
“ இம்பெல்லர்தான் முக்கியமானது. அது சுழல்வதால்தான் மைய விலக்கு விசை உருவாகி அதன் மூலம் திரவம் இழுக்கப்படுகிறது. “
அவர் என்னை அனுதாபத்துடன் பார்த்தார்.
“ பம்ப் வரலாற்றை எடுத்து பார்த்தால் , பம்புகளின் அழிவுக்கும் அதன் நிறுவனங்களின் அழிவுக்கும் முக்கிய காரணமாக இருப்பது இந்த மேலாதிக்க எண்ணம்தான் என்பதை கவனிக்க முடியும். எந்த ஒரு தனி அங்கத்தாலும் பம்பை இயக்க முடியாது. மெக்கானிக்கல் சீல்அலது கிளாண்ட் பேக்கிங் , கேசிங், பியரிங், ஷாஃப்ட், காஸ்கெட், ஸ்லீவ் -அவ்வளவு ஏன் ஒரு சின்ன் நட் கூட பம்ப் இயக்கத்துக்கு அவசியம். இது புரியாமல், இம்பெல்லருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால், முதலில் அந்த பம்ப் அழியும். அதன் பின் அந்த பம்ப் தயாரிப்பு நிறுவனம் அழியும் “
” அப்படி என்றால் நட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? “ குதர்க்கமாக கேட்டேன்.
“ அப்படி சொல்லவில்லை. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை அங்கீகரித்து , அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனபதையே நான் வலியுறுத்துகிறேன். ஆனால் பெரும்பாலான பம்ப் பொறியாளர்கள் இதில் தவறு செய்கிறார்கள்.
அவர்கள் செய்யும் அடுத்த பெரிய தவறு, தான் ஒரு பம்ப் எந்த பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்க நினைப்பதுதான். வாடிக்கையாளர் கொடுக்கும் டாட்டா ஷீட்டுக்கு தகுந்தவாறு பம்பை வடிவமைத்து கொடுத்த்துடன் உன் பணி முடிந்து போயிற்று. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் நீ தலை இடக்கூடாது. சில சமயங்களில் நீ நினைத்தே இராத பணிகளில் கூட அந்த பம்ப் ஈடுபட்டு சாதனைகள் செய்யக் கூடும்.
இன்னொரு பக்கமும் இருக்கிறது. பம்ப் தயாரிப்பாளானிடம் இருந்து பம்ப் பற்றிய முழு தகவலகளையும் பெறாமல் ( தேவைப்படும் நெட் பாசிடிவ் சக்ஷன் ஹெட் , எந்த கெமிக்கலுக்கு பொருந்தும் போன்றவை ) பம்பை புரிந்து கொள்ளாமல் , சிலர் அதன் இயல்புக்கு மாறான செயல்களில் ஈடுபட செய்து அந்த பம்பை நாசமாக்குவார்கள் சிலர். பம்ப்புக்கு எது உகந்த்து என பார்க்காமல் , ஒருவரின் தனிப்பட்ட வீம்புக்காக இப்ப்டி நாசமாக்கப்பட்ட பம்புகள் ஏராளம். ”
நான் ஒருபோதும் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் உறுதிப்பட்ட்து.
” பம்பை அறிதல் என்பது வேறு , புரிதல் என்பது வேறு. அறிதல் என்பது மூளை சம்பந்தப்பட்ட்து. புரிதல் என்பது இதயம் சம்பந்தப்பட்ட்து “ என்று அடித்து சொன்னார் அவர்.
ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது அறிவு சம்பந்தப்பட்ட விஷ்யமாயிற்றே .இதில் உனர்ச்சிகளுக்கு என்ன வேலை என்ற என் எண்ண ஓட்ட்த்தை புரிந்து கொண்ட்து போல விளக்கினார்.
“ பம்ப் மீது எனக்கு ஒரு வித காதல், ஈர்ப்பு ஏறபடும்போது, புரிதல் அதுவாகவே நிகழும். அதன் சூட்சும்ம் அப்போதுதான் புரிய ஆரம்பிக்கும். அதே உப்பு, அதே மிளாகாய், அதே அடுப்புதான். ஆனால் சமையல்கார்ரைப் பொறுத்து சுவை மாறுகிறது அல்லவா? அதற்கு காரணம் சூட்சுமத்தை புரிந்து வைத்து இருத்தல். பம்ப்பை பற்றி தெரிந்து வைத்துக் கொண்டால் போதுமா அல்லது நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமா என்பதை நீதான் முடிவு செய்து கொள்ள வேண்டும் “
” சிறந்த பம்ப் பொறியாளர் ஒருவருக்கு என்னவெல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் ? “ எதிர்பாராமல் கேள்வியை வீசினார்.
சற்று யோசித்து பதில் அளித்தேன்
“ பம்பை சிறந்த முறையில் வடிவமைத்தல், தகுந்த முறையில் பராமரித்தல், அதற்கு உரிய பணியில் ஈடுபடுத்துதல் “ என்றேன்
அன்போடு என்னை பார்த்தபடி சொன்னார்
“ முக்கியமான ஒன்றை மறந்து விட்டாயே. பம்பை நேசிக்கும் ஒரு பம்ப் பொறியாளர்க்கு, பம்பை எப்போது எப்படி அழிப்பது என்பதும் தெரிந்து இருக்க வேண்டும்.”
அதிர்ச்சியில் நிலை குலைந்து விட்டேன்.
” சுய நினைவோடுதான் பேசுகிறீர்களா? ”
அவர் தெளிவாக பதில் அளித்தார்.
” திறன் குறைந்து விட்ட, பழுது பார்க்கவியலாத பம்புகள் இயக்கப்பட்டால், அது இயங்கும் ஒவ்வொரு மணி நேரமும் , இழப்புதான் ஏற்படும். இப்படி ஒரு வாரம் இயங்கினால் ஏற்படும் இழப்பின் தொகையை வைத்து புதிய பம்பே வாங்கி கொள்ள முடியும். இப்படி ஏற்படும் இழப்பினால் சக பம்புகளின் நற்பெயரும் கெடும். எனவே அந்த தவறான பம்பை அழிக்கும் முடிவை உறுதியுடன் எடுக்க வேண்டும் “
இத்தனை விஷ்யங்களா? இதை எல்லாம் நான் கற்க முடியுமா? அவரிடம் என் சந்தேகத்தை கேள்வியாக வைத்தேன்.
” பம்ப் நிபுணத்துவம் பிறப்பால் வருகிறதா. பழக்கத்தால் வருகிறதா? “
“ இயற்கையிலேயே ஆர்வம் இல்லாவிட்டால், என்னதான் பழகினால் நிபுணத்துவம் வராது. ஆனால் தொடர்ந்து பழகாமல் நிபுணத்துவம் அடைந்த வரலாறு இல்லை “
” சிறந்த பம்ப் என்பது இது வரை உருவாக்கப்படவே இல்லை என சிலர் சொல்கிறார்களே ? “
” இது முட்டாள்தனமான பேச்சு. ”
மேஜையை ஓங்கி குத்தினார் . அதில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. ஒரு குடுவை விழுந்து விட்ட்து
” தினந்தோறும் சிறந்த பம்புகள் உருவாக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அவை வரும்போது அதை பார்க்காமல் இருந்து விட்டு, சில காலம் கழித்து, முன்பு போல இப்பொதெல்லாம் பம்ப் வருவதில்லை என போலியாக அங்கலாய்க்கிறார்கள்.
”
அவர் சொல்வது லாஜிக்கலாக இருந்தாலும் இதை எப்படி செயல்படுத்துவது? கேட்டுவிட்டேன்.
“ ஒருவர் முட்டாள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? “
என் கேள்வியை அங்கீகரிப்பது போல புன்னகைத்தார்
” ஒரு பம்ப் நன்றாக வேலை செய்யும்போது எல்லோரும் ஒரேமாதிரி இருப்பார்கள். அப்போது ஒன்றும் கண்டு பிடிக்க இயலாது. அது ஏதேனும் பெரிய பிரச்சினைக்கு உள்ளாகும்போதுதான் , ஒவ்வொருவருவரின் குணாதிசயங்கள் தெரிய வரும். பிரச்சினைக்கு பழி போட பலிகடாவைத்தேடுபவன், அந்த இட்த்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என காட்டிக்கொள்ள முயல்பவன், பம்ப் நன்றாகத்தான் இருக்கிறது என சாதிப்பவன், பம்ப் இயங்குவதை விட , பழுதான நிலையில் இருப்பதே லாபகரமானது என கணக்கிடுபவன் என எத்தனையோ விதங்களை அப்போதுதான் கவனிக்க முடியும்.
கவனிப்பு என்பது முக்கியம். தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதுதான் எல்லாம் எனக்கு தெரியுமே என நினைத்தால் , அழிவு ஆரம்பமாகி விட்ட்து என்று பொருள்.
ஒரு பம்ப் நிபுணரின் வாழ்க்கை என்பது பம்புடன் அவர் கொண்டுள்ள தொடர்புதான். பம்பை எப்படி வடிவமைத்தார், என்ன பிரச்சினைகள் சந்த்தித்தார், எப்படி தீர்வு கண்டார் என்பதுதான் அவர் வாழ்க்கை வரலாறாக எழுதப்படும். வாழ்க்கை என தனியாக எதுவும் இல்லை. இந்த தொடர்புதான் வாழ்க்கை.
எனவே இது வரை நான் சொன்னதை தொடர்ந்து பின்பற்று. நிபுணர் ஆகலாம். நல் வாழ்த்துகள்”
திடீரென எனக்கு அந்த சந்தேகம் வந்தது.
இவ்வளவு நேரம் அவர் பம்ம்பை பற்றித்தான் பேசினாரா அல்லது வேறு உட்கருத்து இருக்கிறதா.
கேட்பதற்குள் அவர் கிளம்பி விட்டார்
4 comments:
பம்ப் பற்றி பாடமே எடுத்துள்ளீர்கள், நல்ல முயற்சி,பகிர்தலை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம், வாழ்த்துக்கள்.
சிறுகதையின் வடிவில் அருமையான கட்டுரையையும் சேர்த்து தந்தமைக்கு முதலில் வாழ்த்துகள். நன்றாக இருக்கிறது. :)
//இவ்வளவு நேரம் அவர் பம்பை பற்றித்தான் பேசினாரா அல்லது வேறு உட்கருத்து இருக்கிறதா. // மிக வித்தியாசமான முயற்சி! அருமை! வாழ்த்துக்கள்
போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!
Post a Comment