Tuesday 22 November 2011

இராசராச சோழன் பிறந்தநாள்

மாமன்னன் இராசராச சோழன் பிறந்தநாள் சித்திரை மாதச் சதயம் என்றும் ஐப்பசிச் சதயத்தில் அவன் பிறந்தான் என்று கூறுவது தவறு என்றும் சித்திரை மாதத்தில்தான் பெருந்திருவிழாவாக அவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பழங்காலத்தில் ஆண்டுதோறும் பன்னிரு மாதங்களிலும் சதய விழா கொண்டாடப்பட்டன. சில ஆலயங்களில் சித்திரை மகோத்சவம் என்னும் பெருந்திருவிழாவை சித்திரை மாதத்துச் சதயத்தோடு இணைத்துக் கொண்டாடியுள்ளனர்.இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு. சித்திரைச் சதய நாளில் திருநாவுக்கரசு பெருமானார் சிவசோதியில் கலந்த நாளாகும். மேலும் இராசராச சோழனின் தேவி பழுவேட்டரையரின் திருமகளார் பஞ்சவன்மாதேவியார் பிறந்ததும் சித்திரைச் சதயநாளேயாகும்.எனவேதான், திருப்புகலூரில் குறிப்பாக, அப்பரடிகள் சிவசோதியில் கலந்த திருத்தலம் என்பதால், மூலவருக்கும் உரிய அத்திரு நட்சத்திரத்தை மகோத்சவமாகக் கொண்டாடினர்.திருவாரூர்த் திருக்கோயில் வளாகத்தில் உள்ள தியாகராசர் கோயில் செங்கற்கட்டுமானமாய் இருந்ததை மாமன்னன் இராசராசனின் புதல்வன் கங்கை கொண்ட இராசேந்திர சோழன் கருங்கற் கட்டுமானமாய் எடுத்ததோடு அவ்வாலயத்தை பொன் தகடுகள் போர்த்தி பொற்கோயிலாகவே மாற்றியமைத்தான்.அணுக்கியர் பரவை நங்கையார் என்ற அம்மையாரின் விருப்பத்திற்காக எண்ணிலாக் கொடைகளை நல்கினான். அந்த அம்மையாருக்குத் தேரில் உடனிருக்கைக் கொடுத்து அவரோடு அமர்ந்து திருவீதியில் பவனி வந்து ஆலயத்தில் தியாகப் பெருமானை இருவரும் நின்று வழிபட்ட இடத்தில் அடையாளமாக நிற்குமிடம் தெரியும் குத்துவிளக்கு ஒன்றையும் வைத்ததாக அங்குக் காணப்படும் அவன் ஆணையைக் குறிப்பிடும் கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது.தியாகராசர் திருக்கோயில் ஸ்ரீவிமானம் முழுவதும் இராசேந்திரசோழனும் அவன் மைந்தர்களும் வெட்டுவித்த கல்வெட்டுச் சாசனங்களே உள்ளன. அங்கு கங்கைகொண்ட இராசேந்திரனால் அவனின் 31-ம் ஆட்சியாண்டின் 244ம் நாளில் (கி.பி.1043) பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது.அக்கல்வெட்டில், ""அய்யர் பிறந்தருளின அப்பிகை சதயத்திருவிழா வரைவுக்கு திருமுளையட்டவும் தீர்த்தத்திற்கு திருச்சுண்ணம் இடிக்கவும் நாம் பிறந்த ஆடித் திருவாதிரைத் திருநாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும் தீர்த்தத்திற்கு திருச்சுண்ணம் இடிக்கவும்....'' என்று அப்பேரரசனே வாய்மொழியாகக் கூறிய சாசனம் பதிவு பெற்றுள்ளது. இதனால் அய்யனாகிய இராசராசன் பிறந்த மாதம் ஐப்பசி என்பதையும் இராசேந்திரன் பிறந்தது ஆடி மாதம் என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது. தமிழக அரசர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று எல்லா மாதமும் கோயில்களில் விழா ஒரு நாள் மட்டுமே நடைபெறும். ஆனால் அரசர்கள் பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று பெருந்திருவிழா என்ற பெயரில் பெரும்பாலும் ஏழு நாட்கள் விழா நடைபெறும் என்றும் சிலர் கூறுகின்றனர்.மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தை ஆதிவராகர் (நித்திய கல்யாண பெருமாள்) கோயிலில் உள்ள இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டுச் சாசனத்தில் ஆவணி மாதத்துச் சதய நட்சத்திர நாளில் தொடங்கி ஏழு நாட்கள் இராசராசனின் பிறந்தநாள் விழாவை மீனவ மக்கள் கொண்டாடியதாகவும் அதை 12 மீனவ குடும்பங்கள் நிர்வகித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவும் பெருவிழாதான். ஏழு நாட்கள் கொண்டாடப்பட்டது என்பதற்காக ஆவணி மாதமே இராசராசன் பிறந்த மாதம் எனக் கூற முடியாது.பல சாசனங்களில் கோயில்கள் தோறும் பெருந்திருவிழா(மகோத்சவம்) சித்திரை மாதங்களில்தான் நிகழ்ந்தன. தஞ்சைப் பெரிய கோயிலில் வைகாசி மாதம் பெருந்திருவிழா நடந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அவை அனைத்தும் சதய விழாவோடு தொடர்புடைய விழாக்கள் அன்று. காமிகாகமம் போன்ற சைவ ஆகம நூல்கள் மகோத்சவ விதிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளன. பெருந்திருவிழாக்களை அரசர்களின் பிறந்தநாள் விழாக்களாக மட்டும் கொள்ளுதல் ஏற்புடையதன்று.திருநந்திக்கரைச் சாசனம், திருவெண்காட்டுச் சாசனம் போன்றவை ஐப்பசி மாதத்தில் இராசராசனின் சதய விழா கொண்டாடப்பட்டதாகக் கூறுகின்றன. எப்படி இருப்பினும் மாமன்னன் இராசேந்திர சோழனின் வாக்குப்படி தன் தந்தை (அய்யன்) பிறந்தருளியது ஐப்பசிச் சதயமே என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.திருவாரூர் தியாகராசர் கோயிலில் உள்ள இராசேந்திர சோழனின் நேரிடை வாய்மொழி ஆணையாக உள்ள இச் சாசனம் தன் தந்தையின் பிறந்தநாள் ஐப்பசிச் சதயம் என்று கூறுவதோடு மற்றொரு அற்புதத் தகவலையும் கூறுகிறது. அதில் மாமன்னன் இராசேந்திரன் தன் பிறந்தநாள் ஆடித் திருவாதிரை என்பதைப் பதிவு செய்துள்ளான்.இப் பேரரசனின் பிறந்தநாள் மார்கழித் திருவாதிரை என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அவர்கள் காட்டும் சான்று திருவொற்றியூர் கோயிலில் உள்ள சாசனம் ஒன்றில் (தென்னிந்திய கோயிற் சாசனங்கள் தொகுதி-5 எண், 1354) "" திருவொற்றியூருடைய மகாதேவர்க்கு உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர் திருநாள் மார்கழி திருவாதிரை ஞான்று...'' என்று குறிப்பிடப்பட்டிருப்பதேயாகும்.எவ்வாறு அப்பரடிகளின் திருநட்சத்திரம் சித்திரைச் சதய நாளில் தன் பிறந்த நட்சத்திரமான சதயத்தையும் இணைத்து திருப்புகலூரில் இராசராசன் விழா எடுத்தானோ அதுபோன்றே சிவபெருமானின் திருநட்சத்திரமான மார்கழி ஆதிரை நாளில் தன் பிறந்த நட்சத்திரமான ஆதிரையை இணைத்து ஸ்ரீ இராசேந்திர சோழதேவர் திருநாளாகத் திருவொற்றியூரில் இராசேந்திர சோழன் கொண்டாடியுள்ளான் என்றுதான் இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.திருவாரூர் சாசனத்தில் ""நாம் பிறந்த ஆடித் திருவாதிரை'' எனக் கூறிக்கொள்ளும் இராசேந்திரசோழன் அதே சாசனத்தில் மார்கழித் திருவாதிரை நாளை ஈசனின் திருநாளாகக் கொண்டாடியதைக் குறிப்பிட்டுள்ளான். எனவே ஐயம்திரிபற மாமன்னன் இராசேந்திரசோழனின் வாக்குப்படி அவன் தந்தை பிறந்தது ஐப்பசிச் சதயம் என்பதும் அவன் பிறந்தது ஆடித் திருவாதிரை என்பதும் உறுதியாகின்றது. எனவே தமிழக அரசு கொண்டாடும் ஐப்பசிச் சதய விழா சரியான நாளில் கொண்டாடப்படுவதேயாகும்.

 

No comments:

Post a Comment